×

பெண்ணுரிமை போராளியை தமிழ்நாடு இழந்திருக்கிறது: மைதிலி சிவராமன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவருமான மைதிலி சிவராமனின் திடீர் மறைவுச் செய்தி பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அளிக்கிறது. அவருடைய மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்ணுரிமைப் போராளியான அவர் – முதலில் நியூயார்க் பட்ஜெட் டிவிஷனிலும், பிறகு ஐ.நா. மன்றத்தில் உதவி ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக இருந்த மைதிலி சிவராமன் – ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவராக இருந்து பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் – உரிமைகளுக்காகவும் அயராது குரல் கொடுத்து ஒரு புரட்சிப் பெண்ணாகத் திகழ்ந்தவர். கீழ்வெண்மணி துயரத்தை அந்த கிராமத்திற்கே நேரில் சென்று விசாரித்து நீண்ட தொடர் கட்டுரை எழுதியவர். அவை  ‘hunted by fire’ என்ற புத்தகமாக வெளிவந்து இன்றும் வரலாற்று ஆவணமாக இருக்கிறது.  பெண்களுக்கு எதிராக எங்கு அநீதி நடைபெற்றாலும் அங்கே வெகுண்டெழும் ஆவேசக் குரலாக மைதிலி சிவராமனின் குரல்தான் இருக்கும்! போர்க்குணமும் – துணிச்சலும் நிரம்பிய ஒரு பெண்ணுரிமைப் போராளியை தமிழ்நாடும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பறிகொடுத்திருப்பது பேரிழப்பாகும். மைதிலி சிவராமனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும்- அவரோடு இணைந்து பணியாற்றிய மகளிருக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் – அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். …

The post பெண்ணுரிமை போராளியை தமிழ்நாடு இழந்திருக்கிறது: மைதிலி சிவராமன் மறைவுக்கு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Maithili Sivaraman ,Chennai ,M.K.Stalin ,Communist Party ,Tamil ,Nadu ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...